இஸ்லாமிய சீர்திருத்தம் என்பது என்ன?
இஸ்லாமிய சீர்திருத்தம் என்பது நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் காலத்தில் நிலவிய தூய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மீண்டும் நிலைநாட்டுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளைக் குறிக்கும்.
இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்தில் நுழைந்துள்ள பிழையான சிந்தனைகளை சடங்குகளை இல்லாதொழித்து இஸ்லாத்தைத் தூய்மைப்படுத்தல் மற்றும் அந்நிய சிந்தனையிலிருந்து முஸ்லிம்களின் சிந்தனையை செயல்களைப் பாதுகாத்தல் என்பவற்றையெல்லாம் இஸ்லாமிய சீர்திருத்தம் அல்லது புனரமைப்பு உள்ளடக்கியது.
முதலில் சமூகச் சீர்திருத்தப் பணியை மேற்கொண்டவர்களாக நபிமார்கள் காணப்பட்டார்கள். அனைத்து நபிமார்களும் பிரதானமாக நாத்திகம்> இணைவைத்தல்> துறவறம் ஆகிய மூன்று வகையான ஜாஹிலிய்யத்துக்களையும் ஒழித்து இறைவனது தீனை நிலை நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இவ்வகையில் இறுதியாக வந்த நபி (ஸல்) அவர்களும் குறித்த மூன்று வகையான ஜாஹிலிய்யத்துக்களையும் ஒழித்துக்கட்டும் பணியில் ஈடுபட்டதுடன் தமது முயற்சியில் பூரண வெற்றியும் கண்டார்கள். உண்மையான ஒரு முழுமையான தன்னிகரற்ற ஒர் இஸ்லாமிய சமூகத்தை உருவாக்கிவிட்டுச் செல்லும் பாக்கியத்தையும் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். நபியவர்களுக்குப்பின் மேற்குறிப்பிடப்பட்ட ஜாஹிலிய்யத்துக்கள் தலை தூக்காவண்ணம் செயல்படுத்துவதற்கும் தலை தூக்கும்போது அவற்றை ஒழித்துக்கட்டி இஸ்லாத்தின் தூய்ம்மையைப் பாதுகாக்கவும் செயல் வீரர்கள் அவசியப்பட்டார்கள். நபியவர்களுக்குப்பின் இறைத்தூதர்கள் வரமாட்டார்கள் என்பதால் இறைத்தூதர்கள் மேற்கொண்ட இப்பணியை முஸ்லிம் உம்மத்தினர் ஏற்று மேற்கொள்ளவேண்டியிருந்தது.
இஸ்லாமிய சமூகத்தில் தொடர்ச்சியாக புனரமைப்புப் பணி தொடரும் என்பதற்குப் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன.
'மார்க்கத்தை நாமே இறக்கினோம் அதை நாமே பாதுகாப்போம்.' (குர்ஆன்)
ان الله يبعث في كل رأس مائة سنة من يجدد أمر دينه
'அல்லாஹ் ஒவ்வொரு நூற்றாண்டின் முக்கிய தருணத்திலும் இந்த மார்க்கத்தைப் புனரமைக்கக் கூடிய சீர்திருத்தவாதிகளை அனுப்பிக் கொண்டே இருப்பான்' (ஹதீஸ்)
'சத்தியத்தில் நிலைத்திருக்கும் ஒரு குழு என்றும், எப்போதும் என் உம்மத்தில் இருந்து கொண்டே இருக்கும்' (ஹதீஸ்)
நபி (ஸல்) அவர்களுக்கு அடுத்ததாக இஸ்லாமிய சீர்திருத்தப்பணியில் ஈடுபட்டவர்களாக குலபாஉர் ராஷிதூன்கள் காணப்படுகின்றார்கள்.
குலபாஉர்-ராஷிதூன்கள் புனரமைப்புப் பணியை வெகு சிறப்பாக மேற்கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து முஸ்லிம் உம்மத்தில் குழப்பங்களும் சீர்கேடுகளும் மீண்டும் தலைதூக்கலாயின. ஜாஹிலிய்யத்துக்கள் பல பரிமாணங்களில் தோற்றம் பெற்றது மாத்திரமன்றி அவை இஸ்லாத்தின்மீது ஆதிக்கம் செலுத்தவும் பார்த்தன. இந்த நிலை தஜ்தீத் التجديد எனும் சீர்திருத்தப்பணியின் தேவையையும் அவசியத்தையும் உணர்த்தியது.