Thursday, March 22, 2012

கவிதை எழுதுங்கள் ..


கவிதை எழுதுங்கள் ..

ஹிஷாம் றாஸிக்


கவிதை எழுதுங்கள்
எல்லோருக்கும் புரியும்படி
எளிமையாய் எழுதுங்கள்.

கவிதை எழுதுங்கள்
காதல் ஒன்றையே
கருப்பொருளாக்காதீர்கள்.

கவிதை எழுதுங்கள்.
முதுகெலும்பற்ற தலைமைகளுக்கு
முதுகு சொறியாதீர்கள்.

கவிதை எழுதுங்கள்
உண்மையைப் பொய்யாக்கி
பொய்களை மெய்யாக்காதீர்கள்

கவிதை எழுதுங்கள்
திரைபோட்ட ரகசியங்களை
திரைகிழித்துக் காட்டாதீர்கள்.

நிலவும் பெண்ணும் தாம்
கவிதையின் ஊற்றுக்கள் அல்ல.

கற்பனையும் பொய்களும் தாம்
கவிதைக்கு அணிகலன்கள் அல்ல.

இலக்கணம் மட்டும் தான்
கவிதைக்கு வரம்பு அல்ல.

கவிதை எழுதுங்கள்.

இக்பாலின் கவிதைகள்
பாகிஸ்தானை உருவாக்கியதே.

ஹஸ்ஸானின் கவிதைகள்
அண்ணலுக்காய் சவால் விட்டதே.

அலீ சொன்ன கவிதைகள்
அழியாமல் வழிகாட்டுதே.

கவிதை எழுதுங்கள்



கவிதையால் ...
பூக்களையும் முகர முடியும்
போர்களையும் ஜெயிக்க முடியும்.

கவிதையால் அழிந்த சமூகமும் உண்டு
கவிதையே வரலாறான தேசமும் உண்டு

கவிதையால் எழுந்த நாகரிகமும் உண்டு
கவிதைக்குள் சமாதியான சரித்திரமும் உண்டு

கவிதை எழுதுங்கள்

உங்கள் கவிவரிகள்
உரமாகட்டும் நம் எழுச்சிக்கு.
உயிராகட்டும் நம் மாற்றத்துக்கு.
வரமாகட்டும் இளம் சந்ததிக்கு.
வளமாகட்டும் நம் இலக்கியத்துக்கு.

உங்கள் கவிவரிகள் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு துப்பாக்கி ரவைகள்.
வெறும் விட்டில்களை இலக்குவைத்து
வீணாக்கி விடாதீர்கள்.

நம்மவரின் அவலங்களை
நாம் வேண்டும் மாற்றங்களை
நாம் வந்த பாதைகளை
நயமாக எழுதிவைப்போம்.


No comments:

Post a Comment